Friday, June 18, 2010

உவகைமிகு உலகத்தமிழ் செம்மொழி மாநாடு






செம்மொழியே! செந்தமிழே!


தமிழே! அழகே!

தரணியில் தவழ்ந்திடும் மங்கா

புது நிலவே!


உன் உச்சரிப்பே

உடற்பயிற்சியாகி விடுகிறது

உதடுகளுக்கு!!

உன் வாசிப்பே

மன மகிழ்வை தருகிறது

மனதிற்கு!


உறவுகள் எத்துணை

இருந்தாலும் தாயிக்கு

நிகராகுமா?!

மொழிகள் எத்தனை இருந்தாலும்

தாய்த் தமிழுக்கு நிகராகுமோ!


இனங்களுக்கொரு தாய்மொழி

இருப்பினும்!?

இயற்கையின் தாய்மொழி

தமிழல்லவா!!!

அகிலமெல்லாம்

அம்மாவென ஒலிக்கும்

ஆவினங்களின்(பசுக்கள்) குரலே

ஆதாரம்!!


பலமொழிகள் பயிலாத போதும்

நிறைவடையும் நெஞ்சம்

சுவையாய் இனிக்கும் எம்

தாய்த்தமிழால்!!

காடுகள்,மலைகள்,கடல்கள்

வானம்,நதிகள்,வற்றாத ஓடைகள்,

மலையின் ஊற்று,வெள்ளைமேகங்கள்,

நிலா,மரங்களிடம் படித்ததை எல்லாம்

வடித்து வைத்தார்கள்; கற்றவர்கள்!

காவியங்களாய் செம்மொழி தமிழில்!!

அற்ப்புதமான கவிதைகளும்

அர்த்தமுள்ள பாடல்களுமாய்

அதில் அதிகம் பேசியது

ஆன்மிகமே!

பூமி மறையும் வரை

பொருந்தும் குறள்களை

தமிழென்ற தன் குரலால் பதிவு செய்துவிட்டு

வானாய் மாறி தீராப்புகழுடன்

வாழும் வள்ளுவனும்

விருட்சத் தமிழின்

விழுதுகள் பிடித்துத்தான் தானென்ற

கொடியை வளர்த்துக்கொண்டான்!

பலமொழிகள் கற்றதனால்

பயமின்றி

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்"

என்றுரைத்த

எழுச்சிக்கவி பாரதியும்

வீரத்தமிழில் வாளேடுத்தே

விசச்செடிகளை வேரறுத்தான்!

தாயைப் போற்றிய பாரதியின்

தாசன் தமிழென்று

வந்ததும்

"தமிழைப் பழித்தவனை என்

தாய் தடுத்தாலும் விடேன்" என்று

தாயினும் மேலாய்

தமிழ்சுவாசம் கொண்டான்!!

இன்னும் இன்னும் கவிஞர்கள்

ஏராளம் உண்டு

தமிழ் படித்து சுவை பிடித்து

மொழிமாறிய புலவர்களும்,

புரவலர்களும் உண்டு!!

திராவிட மொழிகளின்

தாய்மொழி தமிழ்!


அறம் பொருள் வீடு

வீரம் மானம் காதல்

இயல் இசை நாடகம் என

எதிலும் முச்சுவையை கொண்டது

நம் முத்தமிழ்!!

எம்மொழியாயினும்

ஏற்கும் மனமுண்டு

செம்மொழியான நம்

தமிழ் மொழிக்கு!!!

அரிய நெல்லிக்கனியை

தமிழ் செழிக்க

அன்று அவ்வைக்கு அதியன்

ஈந்த இச்சேர மண்ணில்

இன்று உவகைமிகு

உலகச் செம்மொழி மாநாடு!!

வெல்க தமிழ்!!!