Sunday, March 30, 2014

மதுரையல்ல..., மக்காள் இது மாமதுரை...!! (3)


இருக்கு...,ஆனா... இல்ல...??

அங்கையற்கண்ணி ஆலவாயண்ணலின் ஆலயத்தினுள்...,

அரங்கனுக்கோர் கோயிலா...?

இருந்ததா...?

இருந்ததை அறிய...,

தசாவதாரத்தில் உலகநாயகன் சொல்வாரே...,
அதைப் போல ஏழாம் நூற்றாண்டை நோக்கி சற்று பின்னோக்கி பயணிப்போம்
வாருங்கள்.,

ஏழாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில்
சமண-சைவ சமயப் பூசல்கள் அதிக அளவில் நேர்ந்தன...,
மனிதனுக்குள் மதம் தீயென பற்றிக்கொண்ட காலமது ஆம்...,
மதங்கள் ஒன்றொடொன்று மதம்பிடித்து
மோதிக் கொண்டன
வைகையின் வெள்ளநீர் சிவந்திருந்த காலம்...,ஆம் சமணர்கள் பல்லாயிரம் பேர் கழுவேற்றப் பட்டனர்.(கழுவேற்றம்...மனிதக் கண்கள் காண அச்சப்படும் மிகக் கொடிய தண்டனை)
சைவத்தின் கை ஓங்கியது அதற்கு சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசர் சூளைநோய்க்கு ஆட்கொண்டு ஈசன் சொக்கனால் ஆட்கொண்டு விடுவிக்கப் பட்டமையால் சமணத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மீண்டு வந்தார் என்கிற சரித்திர நிகழ்வும் ஓர் காரணமாயிற்று.
தீர்ந்தது மனிதனை பீடித்த மதம் என
வரலாறு நினைத்துக் கொண்டிருந்த போதே...,
மதத்தை கடந்த உட்பிரிவில் சமயங்கள் தங்களுக்கு செஞ்சாயங்களை வாரி இறைத்துக் கொண்டன...
உண்மை
இதுதான்...,
சிவனும் விஷ்ணும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதாயும் எனக்கு தெரியவில்லை
அவர்கள் இருவரும் தங்களை பின்பற்றுபவர்களையும் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளச் சொன்னதாயும்..,
எந்த அகநானூறும்,புறநானூறும், சங்கப் பாடலும்
சொல்லவே இல்லை

இருந்தும்...,

சைவமும் வைணவமும் தங்களுக்குள் பங்காளிச் சண்டையைப் போல் மோதிக்கொண்டன ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்...,
இச்சைவ வைணவ போரட்டங்களுப்பின் சிவாலயங்களில் பெருமாள் சந்நதிகளை அமைக்கும் இருசாரர்களையும் இணைக்கும் இயக்கங்கள் தோன்றின
அவ்வியக்கங்களின் பெருமுயற்சியால்
தில்லைக் கூத்தப் பெருமான்(சிதம்பரம்) திருக்கோயில், மதுரை மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயில் போன்ற பெருங்கோயில்களில் இருசமய ஒருமைப்பாடு ஏற்பட்டு பெருமாள் சந்நதிகள் தோன்றின.
இவ்வாறாய் ஆலவாயண்ணல் அங்கையற்கண்ணியின் ஆலயத்தினுள் தோன்றியவர் தான்
"அருள்மிகு கரியமாணிக்கப் பெருமாள்" இச்சந்நதி ஆலயத்தினுள் வடக்கு (மொட்டைக் கோபுரம்)கோபுரத்தின் நேர் எதிர் உள்ள ஐந்துநிலை சிறிய கோபுர வாயினுள் சென்றால் சுவாமி சந்நதியின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்திருந்தது

இது பிற்பாடு ஏற்பட்ட மொகலாயத் தளபதி மாலிக்காபூர் படையெடுப்பின் போதும் அதன் பின் மதுரையில் ஏற்பட்ட சுல்தான்களின் ஆட்சியின் போதும் சிதைவுற்று அழிந்தது.
இப்படையெடுப்புக் காலங்களில் மீனாட்சியம்மன் திருவுருவச் சிலையும் சொக்கநாதரும் நாஞ்சில் நாட்டில் மறைத்து வைத்திருந்து பிற்பாடு வந்த பாண்டிய,நாயக்க மன்னர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு
ஆனால் பிற்காலத்தில் இக்கரிய மாணிக்கபெருமாள் சந்நதி சற்று சீரமைக்கபட்டாலும் அதில் கரிய மாணிக்கபெருமாள் இல்லாதது மர்மமே...!!
தற்பொழுது இதே சந்நதி மண்டபத்தில் தான் அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் இருந்து அருள்பாலிக்கிறார்
திருக்கல்யாண கோலத்தில் நிற்கும் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு உமையவள் மீனாட்சியம்மையை தாரை வார்க்கிறாரே...,
சாட்சாத்...,(இந்த வார்த்தையின் பொருள் உண்மையில் எனக்குத் தெரியாது எந்த மொழி தெரியாது ஆனால் ஒரு நபரையோ,ஒருபொருளையோ,வேறு சில விசயங்களையோ என் இளம்பருவத்தில் எனது தாத்தா பேசும் போது அடிக்கடி பயன்படுத்துவார் இதைப்போல பல சொற்கள் நான் பொருள் புரிந்தும் பொருள் தெரியாமல் தேடிக் கொண்டிருப்பவை) அவரே கரிய மாணிக்கப் பெருமாள்.
இக்கரிய மாணிக்க பெருமாள் திருக்கோயிலினுள் இருந்தார் என்பதன் சாட்சி இல்லாமல் இல்லை இருக்கிறது ஆம்...,
மன்னர் திருமலைநாயக்கர் தனது ஆட்சிகாலத்தில் மீனாட்சி அம்மன் கோயிலில் அநேக திருப்பணிகளை மேற்கொண்டார் அதில் ஓன்றுதான் சிதிலமடைந்த கரிய மாணிக்க பெருமாள் கோயிலின் தூண்களையும்,கற்காரங்களையும் வைத்து பொற்றாமரைக்குளத்தின் மேற்கு கரையில் உள்ள கலை நயமிக்க சங்கலி மண்டபத்தைக் கட்டினார். அதன் தூண்களில் உள்ள பஞ்சபாண்டவர்,அனுமன் சிலைகள் இருப்பதே....கரிய மாணிக்கப் பெருமாள் சந்நதி இருந்து பின் சிதைந்ததிற்கான சான்றுகள்
முடிவாய் மீனாட்சியம்மன் ஆலயத்தினுள் வைணவனும் கரிய மாணிக்க பெருமாளாய் இருந்தார் இன்று இல்லை.
மொத்தத்தில் ஆன்மீக பயன்பாட்டில் இருந்த சைவமும் வைணவமும் சில காலம் அரசியல் சதுரங்கத்தில் சிக்கித் தள்ளாடிய நெடி
இருக்கத்தான் செய்கிறது

மதுரையல்ல...,மக்காள் இது மாமதுரை...!! (2)

 

 மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்.
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்.
மதுரை இளங்கண்ணிக் கௌகிகனார்.
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் உற்றனார்.
மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனார்.
மதுரை ஓலைக்கடைக்கண்ணம் புகுந்தாராயத்தனார்.
மதுரை ஓலைக்கடையத்தூர் நல்வெள்ளையார்.
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்.
மதுரைக் கண்டர தத்தனார்.
மதுரைக் கண்ணத்தனார்.
மதுரைக் கண்ணனார.
மதுரைக் கணக்காயனார்.
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
மதுரைக் கதக்கண்ணனார்.
மதுரைக் கவுணியன் பூதத்தனார்.
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்.
மதுரைக் காஞ்சிப் புலவர்.
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்.
மதுரைக் கூத்தனார்.
மதுரைக் கொல்லன்புல்லர்.
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்.
மதுரைச் சுள்ளம் போதனார்.
மதுரைத் தத்தங் கண்ணனார்.
மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன் தேவனார்.
மதுரைப் பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்.
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்.
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்.
மதுரைப் புல்லங் கண்ணனார்.
மதுரைப் பூவண்டல் நாகன் வேட்டனார்.
மதுரைப் பெருங் கொல்லனார்.
மதுரைப் பெருமருதனார்.
மதுரைப் பெருமருதிள நாகனார்.
மதுரைப் போத்தனார்.
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்.
மதுரை மருதனிள நாகனார்.
மதுரை வேளாசான்.
மதுரை வேளாதத்தர்.

யார் இவர்கள்...?


தலை,இடை,கடை, என முச்சங்களை வளர்த்து முத்தமிழையும்
காத்த சங்கப்புலவர்களே இவர்கள்.

மதுரை அல்லாத சேர, சோழ,பல்லவ நாட்டுப் புலவர்கள் பலர் இருப்பினும்
பாண்டி நாட்டு மாமதுரையைச் சேர்ந்த புலவர்கள் இவர்கள்,இவர்களின் தனிச்சிறப்பு உயிரினும் மேலான தம் மண்ணை தன் பெயருடனே இணைத்துக் கொண்டவர்கள் என்பதே..,
இவர்களனைவருடனும் ஈசனே
சங்கரனார் எனும் பெயரில் தெய்வப் புலவராய் இருந்து தமிழ் காத்தாராம் நமசிவாயன்,

Saturday, March 29, 2014

மதுரையல்ல மக்காள்...,இது மாமதுரை...!!

 

மதுரையல்ல மக்காள்..., இது மாமதுரை...!!

என்னோட மெரீனா பீச்...,
ஆமாங்க..., bro.,
என்னோட மெரீனா பீச்
என்னோட லார்ட்ஸ் கிரவுண்ட்(மேல ஆடிவீதி)
என்னோட கேம்பிரிட்ஜ்
என்னோட தாஜ்மஹால்
என்னோட லவ்வர்ஸ் பார்க்
என்னோட நான் ஏறிப்பார்த்த ஈபிள் டவர்
எல்லாமே...,
எனக்கு எங்க மீனாட்சி அம்மன் கோயில் தாங்க பாஸ்..,
இந்த மதுரைய சுத்துன இந்த பியூஸிபெலஸ் இன்று பிழைப்பிற்காய் எங்கெங்கோ சுற்றித் திரிந்தாலும்...,உள்ளுக்குள் உயிராய் என் ஊரின் நினைவுகள்...,ஒவ்வொரு நாளும் மலரும் நினைவுகளாய் மலர்ந்து கொண்டுதானிருக்கிறது.யாராச்சும் ஒரு ஊரைக் காதலித்து பார்த்திருக்கிறீர்களா...? சகோ. ஆமா...சகோ
மதுரையில பிறந்த ஒவ்வொருத்தரும் மதுரைய காதலிக்கிறாங்க தெரியுமா...? இதுதான் காலப்போக்குல மறுவி மதுரையசுத்துன எந்த பீயூஸிபெலஸும்
(பீயூஸிபெலஸ்ன்னா மாவீரன் மகாஅலெக்ஸாண்டரின் குதிரைதான் எல்லாரும் "மதுரையச் சுத்துன கழுதை"ன்னு சொல்வாங்க நாம அப்படி நம்மளையே மரியாதை இல்லாம சொல்லக் கூடாதுல்ல அதனால தான் இந்த பீயூஸிபெலஸ் பில்டப்)
மதுரைய விட்டுவெளிய போகாதுன்னு சொல்றாங்க...,:-O

இருக்கட்டும் சகோ..., வாங்க எல்லாரும் மதுரைக்கு வருவோம்...,

மதுரை எனச் சொல்லும் முன் ஆதாராமாய் சில..,
500 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியப் பெருங்கிரகத்தில் ஏற்பட்ட வெடிப்பின் விளைவினால் வீசி ஏறிந்த சிறிய துகள் தான் இன்றைய அனைத்து உயிர்களும் தோன்றக் காரணமான பூமி இதில் உயிரினங்களின் உச்சமென கருதப்படும் (மனிதன்)நாம் தோன்ற பலகோடி ஆண்டுகள் ஆகிவிட்டதாம்.
இது அறிவியல் ஏற்றுக்கொண்ட உண்மையும் கூட..., ஆம்

குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என டார்வின் தனது கூற்றை
ஒரே வரியில் சொல்லிவிட்டாலும் உலகில் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்து நாற்கால் உயிரினமான குரங்கினம் தோன்றிய பின்
இயற்கை தன் சோதனையை ஏறக்குறைய 299 இலட்சம் ஆண்டுகள் ஒரு நீண்ட நெடுஞ் சோதனையாக நடத்தி வெற்றிகண்டிருக்கிறது
குரங்கின் பரிணாம வளர்ச்சி உயிரின வரலாற்றின் உச்சம் மனிதனை உலகிற்கு பரிசளித்துள்ளது இயற்கை இந்த நீண்ட நெடிய சோதனையை நடத்தி மானுடத்தை உலகினுக்கு பரிசளித்த காலம் கி.மு 100000 என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறாய் தோன்றிய மனித இனம் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் தோன்றவில்லையாம். உலகின் மூன்று முக்கிய பகுதிகளில் தான் தோன்றியதாம் அதில் ஒன்று தான் தமிழர் தாயகம் குமரிக் கண்டமாம்
இக்குமரிக்கண்டத்தில் ஓடிய பஃறுளி ஆற்றின் கரையில் தான் பழம் மதுரை அமைந்திருந்ததாம்

மதுரம் எனும் சொல் இனிமையைக் குறிக்கும் மதுரமான தமிழ்
இந்நகரில் எப்போதும் (எக்காலத்திலும்) சிறப்பாக செழித்து வாழ்வதால் இது மதுரை எனப் பெயர் பெற்றது மேலும் ஈசன் தன் சடாமகுட அமிழ்து சிந்தி எங்கும் மதுரம் கமழ்ந்ததால் இந்நகர் மதுராபுரி எனும் பெயர் பெற்றது
இந்நகரை சுற்றிலும் மருதவளம் மிகுந்து விளங்குவதால் இந்நகர் மருதை
எனவும் வழங்கப்பட்டது.

சற்றே நீந்தி
பஃறுளி ஆற்றின் கரைக்கு வருவோம்...,

இதோ அகலவிரிந்து அதிசயிக்கும் நம கண்களுக்கு விருந்தாய் நெடிதுயர்ந்த மாடங்களும் மாளிகைகளும், அகலவிரிந்த சாலைகளும், வணிகத் தெருக்களும் ஆடல்மகளிரும் புலவர் பெருமக்கள் கூடல் கொள்ளும் தலைச் சங்கம் தெரிகிறதே மக்காள்..., அஃதே நம் தலைச் சங்கம் கட்டிக் காத்த தென்மதுரை மக்காள், தென்மதுரை..., தென்மதுரை எனக் கூறக் காரணம் இன்றைய மதுரையில் இருந்து தெற்கே கடல் கொண்ட குமரியில் அது இருந்தமையால்.,


வந்ததோர் ஆழிப்பேரலைகளைத் தாங்கிய முதலாம் கடல்கோள்
ஆண்டு தான் கி.மு. 2387 அழித்தொழித்துச் சென்றது அமிழ்தினும் இனிய தமிழ் காத்த நம் மதுரையை அந்த அழிப் பேரலை..., ஓய்ந்தது நாமல்ல., மக்காள்
நம் தாய் தமிழுமல்ல., ஆரவாரங்கொண்ட அந்த ஆழிப் பேரலை தான் அழிந்து அமைதி கொண்டது நகர்ந்தான் பாண்டியன் குமரிக் கண்டத்தின் வடக்கு நோக்கி.., கவாடபுரத்தினை தலைநகராய் கொண்டு இரண்டாம் மதுரையை அமைத்தான் அதிலும் மறவாது தன் தாய் தமிழ் செழிக்க இடைச் சங்கத்தை நிறுவினான்.., கடவுளுக்கும் கட்டுப்படாத அந்த காலச்சக்கரம் சுழன்ற ஆண்டுகள் ஏறத்தாழ 1803 ஆண்டுகள் ஆம், மீண்டும் மதங்கொண்ட அதே ஆழிப்பேரலைகளைத் தாங்கிய இரண்டாம் கடல்கோள் காலம் கி.மு.504
சின்னாபின்னமாக்கிச் சிரித்தது மண்மேடாய் போன தன் மதுரையைக் கண்டு சிறிதும் கலங்காத அன்றைய மதுரைக்காரன், சிறிதும் தாமதியாது மணவூரைத் தலைநகராக்கினான்

அசுரகதியில்...,

அந்தோ பரிதாபம்...?!

எங்கே இவன் இங்கும் சங்கம் வைத்து தமிழ்வளர்ப்பானோ...?
என நினைத்ததோ என்னவோ...?
வந்த சோகத்தின் ஈரம் காயும்முன்னரே..,
வந்தழித்தது மூன்றாம் கடல்கோள் 198 ஆண்டுகளே ஆண்ட மணவூரை பாண்டியர்களின் கையில் இருந்து கடல் கொண்டது.
மாபெரும் சரித்திர சோகம் ஆம் கி.மு. 306ஆண்டு நடந்த மூன்றாம் கடல்கோள் சந்ததிகள் காணாதவாறு அழித்தது என்றால் மிகையல்ல..,
நடந்தது எல்லாம் தாங்கி இரும்பென இருகி மீண்டும் வடக்கு நோக்கி நகர்ந்தான் அன்றைய பாண்டியன்

"பாண்டியன் முடந்திருமாறன்" 

கி.மு. 306 ஆண்டு இன்றைய தமிழகத்தின் தெற்கே கடல் துண்டித்த விழுங்கிய குமரியில் இருந்து விலகி இன்றைய இந்த மதுரையை தலைநகராகக் கொண்டு பாண்டிய அரசை நிறுவினான்.
அவனே கடைச்சங்கத்தினையும் நிறுவி தன் தமிழைக் காத்தான் இதுவே தொல்காப்பியம் சுட்டிக்காட்டும் தமிழகமும் ஆகும்.
இதயம் கனக்க
கண்ணீர் மல்க
சற்று ஆணவத்தோடே..,
ஒரு மதுரைக் காரனாய் சொல்கிறேன்.
உலகில் எத்தனையோ சாம்ராஜ்யங்கள்,இனங்கள் போர்களினாலும்
இயற்கையாலும் ஏற்பட்ட அழிவில் இருந்து தங்களை காத்து மீண்டும் புத்துயிர் பெற்ற சரித்திரங்கள் பல இருக்கலாம்
ஆனால்...,
ஒரு இனம்
இயற்கை பேரழிவுகளைக் கடந்து உயிரினும்
மேலாய் மதித்த தன் மொழியை மட்டுமல்ல தான் வாழ்ந்த நகரத்தையும் தான் புலம் பெயர்ந்த இடங்களிலெல்லாம் மீண்டும் மீண்டும் நிறுவி
5000 ஆண்டுகளுக்கும் மேலாய் மதுரை எனும் நகரை உலகப் பந்தே வெடித்தாலும்
இனி அழியாதடா
என் மதுரை என நீருபனம் செய்தவன் மதுரைத் தமிழன்.
மதுரையின் மிகச் சிறந்த நகர நிர்மாணத்திற்குமே..., ஏற்கனவே அவன்(மும் மதுரையும் நிர்மாணித்த பாண்டிய மன்னர்கள்) மூன்று நகரங்களை நிறுவிய நிர்மாண அனுபவ அறிவே காரணம்.
பல்லாயிர வருட பாராம்பரியமும்
மொழிப் பற்றும்
கொண்ட என் மதுரை இனி

மதுரையல்ல..., "மாமதுரையே"

இந்நகரத்தின் பழங்கதைகள்,சிறப்புகள்,தொன்மை,
பற்றிய இந்த இயற்கை விரும்பியின் தேடல்கள் உணர்வுடன் தொடரும்....,