Sunday, December 13, 2015

நட்பின் இழப்பு







அன்று பெய்த....
அதே மழை இன்றும்....
அன்றவள் என் இனிய தோழமை
அழைத்தனள் அவளின் குடைக்குள்
சென்றனன் நனையாது நானும்
தோழமை என நான் சொன்னதன்
உட்கரு தோழி என அவளை பெண்பாலில்
கூறத்தெரியா......நினைக்க விழையா....
பால் மனம் 
பாவை இன்றவள்
பார்க்கிறாள் நனைவதை
பாராது சென்றனள் பார்வை ஒன்றை
விதையாய் நட்டுவிட்டு
பாவி மனம் குறுகுறுக்க
பார்த்தவிழி நீர் இரைக்க
என் மனதை என் மனமே
கேள்வி ஒன்னு கேட்குதடா....?!
குடைதான் சிறிதோ.....? இல்லை
நீ குறைதான் உளனோ....?
மனம் தான் இலையோ.....இல்லை
மறந்தாள் உனையோ.....?
வயதொரு காரணமோ....இல்லை
வாலிபமொரு களவோ....?
எதுவென்ற போதினிலும்
இழந்ததடா ஓர் நட்பு....!!!


Tuesday, October 27, 2015

வாழ்க்கை

மனசு
இருக்கு....!?
இல்லாத உறுப்பாய்...!!


காதல்
மடுவிலிருந்து
மலை நோக்கிகூட
பாயும் நதி...!!


காதல்
இது ஒரு
தன்னாட்சிக்
கல்லூரி...!!!


திருமணம்
சமுதாயப் பல்கலைக்கழகத்தின்
காதலுக்கான
பட்டயப் படிப்பு...!!


தாய்மை
பெண்மைக்கு
கிடைக்கும்
பிரம்மரிஷி பட்டம்...!!!


குழந்தை வளர்ப்பு
வாழ்க்கை கல்வியின்
செயல்முறை பயிற்சி


அந்திம காலம்
அனாதை ஆசிரமங்களுக்கு
செல்லாமலிருந்தால்
செயல்முறை பயிற்சி
தேர்வில் வெற்றி

கடவுளும் நானும்




நிகழ்வு நடப்பது
மதுவின் மயக்கத்தில்...,
இங்கு நீ கடவுளுமில்லை
நான் மனிதனுமில்லை
எனைப் பாதித்ததோர்
படர்க்கைச் சொல்
"அவன் என்ன பாவம் செய்தானோ...?
பிள்ளையாய் பிறந்திருக்கிறது"
இதுவே அந்த படர்க்கை
புரியாமல் நானும்
பெற்றவளிடம் கேட்டேன்
"நானென்ன பாவம் செய்தேன்
எனக்கோர் பிள்ளை இப்படி"
டேய் அதெல்லாம்
பூர்வ ஜென்ம பாலபலன்
கவலை விடு எல்லாம்
கடவுள் பாத்துக்குவான்...???
பெற்றவள் பற்றுடன் இப்படிச் சொன்னாள்
அதனால் தான் உன்னிடம்
வந்தது பயபக்தியால் அல்ல....
தெரியாததோர் பிறவியற் செய்த
பலனுக்காம்....  புரியாததோர்.....???
பலனாய் நிகழில்....?!
நிஜம் என்னவென்பதை
அறிய அறிவு ஆசைப்படுகிறது அதனால்...
உனக்கும் எனக்குமொர்
ஒப்பந்தம்
உலகை இயக்கும் காலமும்
காலத்தை படைத்த நீயும்
ஓர் உடன்படிக்கைக்கு உள் வரவேண்டும்
என்னவெனில்
எந்த மானு டம் தண்டிக்கப் படுகிறதோ....?
அதன் ஊழ்வினையை அது அறிதல் வேண்டும்
முடியுமெனில் இனி உன்
காலச்சக்கரத்தை நீ நகர்த்து.