Thursday, August 21, 2014

விடை சொல்லா......விழிகள்.....!!!
விடை சொல்லா......விழிகள்.....!!! நானும் என் நிழலாய்….அந்நாளில்….,
எனைத் தொடர்ந்த நண்பனும்...,
சந்தித்து.....
அன்று அருந்திய அதே மீனாட்சி காபி நிலையத்தில்...
70 காசுகளாய் இருந்த விலை
 இன்று 10 ரூபாயாக.......,
எங்களைப்போல் வளர்ந்திருந்தாலும் 
சுவை குன்றா அதேகாபியை குடித்து மகிழ்ந்து கொண்டிருந்த பொழுது...,
எங்களைப் பார்த்துக் கொண்டே…. இருசக்கரவாகனத்தில் கணவரின் தோளை
ஒரு கையால் பிடித்தபடியே சென்ற அந்த…..ஒரு ஜோடி கண்களின் கதிர்வீச்சு காலாவதியாகிவிட்ட எங்கள் நினைவுக் கூழ்மங்களைகலக்கி விட்டது
நொடிப்பொழுதில் எங்களிருவருக்கு மட்டும் இந்த பூமிப் பந்து ஒளியினும் மிகுந்ததிசைவேகத்தில் பின்னோக்கி பயணித்துக் கொண்டிருந்தது
நினைவெனும் தேசியநெடுஞ்சாலையினில்...,
சுமார்பத்தாயிரம் நாட்களுக்கும் முன்னர் நடந்து இறந்த.....
அந்த ஓளிநினைவலைகளை இந்த பூமிப் பந்து கடந்து நின்ற பொழுது...,
நானும் அவனும்பள்ளிவிட்டு நடந்துவரும் அந்நாளைய அதே காட்சி
இது ஒளியியல் விஞ்ஞானத்திலும் கூடசாத்தியமே...,!!!
பள்ளி செல்வதும் வருவதும் அன்றைய அன்றாடநிகழ்வுகளில் ஒன்றென்றாலும்....,
ஒரு சில நாட்களாய் நாங்கள் பள்ளிவிட்டு எங்களது லார்ட்ஸ் மைதானத்தில்
(மீனாட்சியம்மன் கோயிலின் ஆடி வீதி தான்) ஆடிக்களைத்து
மொட்டைக் கோபுரத்தின் வழி வெளிவருகையில்...,
எங்களைக் கடந்து சென்றதொரு.....,"மொகலாய நந்தவனம்"
முதல் நாள் பார்வைச் சங்கமம்
எத்தகையதொரு பாதிப்பும் எங்களிருவருக்கும்
ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை ...!
ஆயினும் காலக் கெடிகாரம் நாங்கள் நினையாமலே..... 
பார்வை சந்திப்புக்களைபற்றவைத்துக் கொண்டிருந்து பலமுறை..,
விளைவு நானும் தோழனும் விளையாட்டின் விருப்பம் கடந்து
கடிகாரத்தின் முட்களை கணக்கிட நேர்ந்ததுமறுபுறமோ...,??
கண்களால் கபடி ஆடிய அந்த "மொகலாய நந்தவனம்"
எங்களால் மனம் இடர்கொண்டதாய்
தெரியவில்லை...!
காரணம் கடிகார முட்கள் கூட நேரம் மாறலாம்
நந்தவனம் கடத்து செல்லும் நேரம் மாறியதே இல்லை
அவளின் அந்த காலந்தவறாமை எங்களை மகிழ்வின் எல்லைக்கே
அழைத்து சென்றது
(பார்வைகள் பழகி விட்டதால் உள்ளம்உரிமையெடுத்துக் கொண்டதோ...?)
மொகலாய நந்தவனம்உரிமையுடனான "அவளாய்" மாறினாள்
அந்நாளைய இளமனதிலும் இதே நிலைமையே...,
நான் நண்பனை எனது நிழலாய் உருவகப்படுத்தியதற்கும்
காரணம் உண்டு சாம்ராஜ்யங்களையே தடுமாறச் செய்த காதல்
விவகாரங்கள் எங்களை மட்டுமென்ன...
விதிவிலக்காய் விட்டா செல்லும்..?
அந்த கபடி விளையாடும் காந்தப்பார்வைக்கு சொந்தமாகப்போகும்
சுந்தரன் யாரென...
சொல்லமாட்டாளா...?
என்கிற தவிப்பு என்னுள்ளும்
அவனுள்ளும் ஒரே வேகத்தில்....,
அந்த வேகம் விபரீதமாகாமல் தடுத்தவன் அவன்...
அதனாலேயே அவன் என் நிழலானான்,
எப்படியெனில்...?
அவன் அன்று கூறிய அதே வார்த்தைகள்..
இன்று நேர்கூற்றாய் இதோ...!
"டேய் மாப்ளே ரெண்டு பேரும் ஃபலோ பண்ணுவோம்....சரியா..
உன்னைய லவ் பண்ணுன.... "எனக்கு தங்கச்சி"
என்னைய லவ் பண்ணுன...... "உனக்கு தங்கச்சி"
சரியா மாப்ளே...."
உலகத்தின் முதல் ஜென்டில்மேன் அக்ரிமெண்டை
சந்தித்த மகிழ்வில் சரி என்றேன் நானும்,
இனி தான் கஷ்டமே...!
இன்று போலல்ல... அன்று
நாம் விரும்பியவளின் பெயர் காணவே....,
காலங்கள் பல கடந்துவிடும்.,
ஒருவன் பின் தொடர்கிறான் என்றாளே...
பெயர் சொல்வதை தவிர்த்து ஏப்பா..போப்பா..,ன்னு 
பேசிவிடும் அன்றைய பெண்கள், அதையும்
கடந்து விரும்பியவளின் தோழியைத் தேடிபிடித்து
காலில் விழாக் குறையாய் பெயர் கேட்டுத் தெரிவதற்குள்...., 
ஆற்றில் அழகர் இறங்க அடுத்த முறை தயாராகி நிற்பார்,
இத்துணை சிரமங்களும் அதற்கும்மேல்
அவள் மொகலாய நந்தவனமென்பதால்
மதம் என்கிற மாபெரும் அசுர விசயமும்
எங்களுக்கு இருந்தது.
அவளின் பெயரைக் கண்டுபிடிக்க
நெருங்கிபேசிய பொழுதெல்லாம்
புன்னகை... புன்னகை... புன்னகை...,
புன்னகை ஒன்றே பதிலாய்.... 
கேட்டு கேட்டு தோற்றுப் போனோம்
உதவி கேட்டுச் சென்ற......,
அவளின் தோழிகளும் 
உதறித் தள்ளியது ஏமாற்றத்தின் உச்சம்.
இறுதியாய் அவள் சிரிக்கிறாள்
அதனால் அவள் எங்களிருவரில் யாரோ...,?
ஒருவரைக் காதலிக்கிறாள்....!!!!
எங்களிருவருடைய மனசு சொல்லும் வார்த்தைகளிது
இவ்வாறாய் முடிவெடுத்த...,
நாங்கள்...., அவள் பெயரை அறிய எடுத்த
அத்துணை முயற்சிகளும் தோற்றுவிட..,
இறுதியாய் அவள் தினமும் கேடயமாய் தாங்கி வரும்
பெரிய சைஸ் ரெக்கார்டு நோட்டை 
"தா ஒரு நிமிடம்"
என கேட்க அவளும் வழக்கமான
அதே புன்னகையுடன் தந்தததும்....,
"ஆஹா ஏமாந்துவிட்டாள்" 
என எண்ணி அவசர அவசரமாய் 
அதன் முதல் பக்கத்தில் அவளின் பெயர் பார்த்துவிட
பிரித்த பொழுது அதில் இருந்த பெயர் "R.செல்வி" என்பதாய்....,
ஒரு மொகலாய நந்தவனத்திற்கு செல்வி என்ற இந்து பெயரா...?
வழக்கமான அவளின் புன்னகை இக்கணம் ஏமாற்றிய எக்காளத்தில் 
நமட்டுச் சிரிப்பாய் இருந்தது தோல்வியை ஏற்றுக் கொள்வதை தவிர
வேறு வழியில்லாததால்...
துவண்டது மனம்,
அப்பொழுதும் அவளை வெல்ல வேண்டுமென்ற எண்ணம்
துளியுமில்லை இரு மனதிலும்...,
இந்த முயற்சிகளுக்கிடையில்
காலச் சக்கரம் தனதுகடமையை செவ்வனே செய்து கொண்டிருந்தது....,
நாங்களும் எங்களது பதிமன் வயதின் பாலாற்றில் நீந்திக் கொண்டே ,.,
இருந்ததில் எந்த சிக்கல்களும் இல்லை.
தொடர் கால நிகழ்வுகளுக்கிடையில்...,
ஓர் நாள்
நண்பர்களனைவரும் மதுரையின் அன்றைய ஹைகிளாஸ் தியேட்டர்களில்
ஓன்றான சினிப்பிரியா தியேட்டரில் "மெல்லத்திறந்தது கதவு" 
படம் பார்த்துக் கொண்டிருந்தோம்
நாயகன் மோகனின் கடந்த கால காதலில் வரும் நாயகி இதேபோல்
கண்களிரண்டை மட்டுமே காட்டும் ஒரு மொகலாய நந்தவனமே...,
இக்காட்சி வந்ததும் நானும் என் நண்பனும்  அத்திரையரங்க இருளில் 
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டது 
இன்றும் நினைவில் நிற்கும் பழமை
திரைப்படத்தில் வரும் அந்த நாயகியின் பெயர் "நூர்ஜஹான்" 
இதிலிருந்து சில நாட்கள் கழிந்து அவளை நாங்கள் பார்த்த பொழுது
மீண்டும் அதே பெயர் கேட்கும் கெஞ்சல்கள்...,
புன்னகை ஓன்றே மீண்டும் மீண்டும் அவளின் பதிலாய் வர......,
கோபங்கொண்ட நான் "நீ என்ன சொல்வது இதோ நான் வைக்கிறேன் இன்றிலிருந்து
உனது பெயர் "நூர்ஜஹான்" என்றேன். 
சிரித்தாள்...,
அன்று வரை அவள் பெயர் சொல்லாமல் அலைக்கழித்த
அத்துணை இன்னல்களும் பறந்தன
அந்த ஒற்றைச் சிரிப்பினில்...!
ஏற்றுக் கொண்டாளா......?
இந்த பெயரை அவள்
சந்தேகம் தீர...,
பரிசோதனையில் இறங்க நானும் நண்பனும் முடிவுசெய்ய,
வழக்கம்போல் செய்துவரும் பாதுகாவலர் வேளையில் 
சற்று இடைவெளியை தூரமாக்கி 
அவள் ஒர் ஐம்பதறுவது அடிகள் கடந்த பின்
 "ஏ....நூர்ஜஹான்" உரக்கக் கத்தினான் தோழன்.......,
நடந்ததோர் ஆச்சர்யம் .........,
அந்த வானத்தின் ஆயிரமாயிரம் நட்சத்திரங்களும்
எங்களைப் பார்த்து புன்னகைத்ததோர் பூரிப்பு 
ஆம் அந்த மொகலாய நந்தவனம்
திரும்பிப் பார்த்தது பார்த்தது மட்டுமல்ல......,
இதுவரை இல்லாத ...,
பார்க்காத......,
ஓர் பரவசமூட்டும் வெட்கப்புன்னகை அவளிடம்
நண்பன் கேட்டான்
 "மாப்ள இந்த பார்வைக்கு சொந்தக்காரன்
நீயா....? இல்லை நானா...?"
பெயர் கேட்கும் படலம் விட்டு உனது பார்வை யாருக்காக...?
இதையும் கேட்டுத் தோற்றோம் 
காலம் தன் நகர்தலை.....,
நாட்களாய் வாரங்களாய் மாதங்களாய் வருடங்களாய் நகர்த்த.....
நாங்களும் நகர்ந்தோம்
.கடமைகள் கைகோர்க்க.....
காதல் கட்டிய மனைவியிடமாய் மாற....,
தீடிரென அன்று பார்த்த அதே விழிகள்
இன்றா சொல்லப் போகிறது...? 
இந்த பார்வைக்கு சொந்தம் இருவரில் யாரென...?
ஏய்.....நூர்ஜஹான்...!!
அன்று என் நண்பன் உன்னை
இருவரில் ஒருவருக்கு தங்கையாக்க விரும்பினானடி ........
இன்றோ....நீ
இருவருக்கும் தங்கையானாயடி 
விடை சொல்ல உன் விழிகளினால்........!!!!

1 comment: